ஒரு கருவியால் உங்களின் இதயத் துடிப்பை சீராக்க முடியும், ஏன் உங்கள் உயிரையே காப்பாற்ற முடியும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? நம்மால் நம்ப முடிகிறதோ இல்லையோ, 1960 களின் தொடக்கத்தில் வாழ்ந்த மக்களால் நிச்சயமாக நம்பியிருக்க முடியாது. இதயம் பலவீனமானால் எப்போது வேண்டுமானாலும் உயிர் போய்விடலாம் என்ற பயத்தில் இருந்த அந்தக் கால மக்களுக்கு, உண்மையாகவே ஒரு கருவி தங்களை வாழ வைக்கக்கூடும் என்று அறிந்த போது, அவர்களால் நிச்சயமாக நம்பியிருக்க முடியாது. ஆனால் ஒரு மனிதனின் அசாத்திய முயற்சியால் அது சாத்தியமானது. அவர் பெயர் வில்சன் கிரேட்பாட்ச் (Wilson Greatbatch)! இன்றும் பலரின் உயிரைக் காப்பாற்றக் கூடிய பேஸ்மேக்கர் என்ற கருவியைக் கண்டுபிடித்தவர் அவர் தான். ஒரு தனி மனிதனின் முயற்சி எவ்வளவு பெரிய நல்ல மாற்றத்தை இந்தச் சமூகத்தில் விளைவிக்கக்கூடும் என்பதற்கு அவர் ஒரு உதாரணம். இத்தனைக்கும் வில்சன் கண்டுபிடித்த அந்தக் கருவி உள்ளங்கையில் அடங்கக் கூடிய ஒன்று என்பது தான் ஒரு ஆச்சரியமான செய்தி!
இயல்பில், ஒரு பொறியியலாளரான வில்சன் கிரேட்பாட்ச், பொருள்களைக் கையாள்வதில் மிக ஆர்வம் உள்ளவராக விளங்கினார். ஒரு கால கட்டத்தில் அவரின் அந்த ஆர்வமே, அவர் பேஸ்மேக்கர் கண்டுபிடிக்கக் காரணமாக இருந்தது.
ஒரு உள்ளங்கை அளவிற்கே இருக்கும் பேஸ்மேக்கர் கருவியின் பயன்பாடு இதயத்துடிப்பு சீராக உள்ளாதவர்களைக் காப்பாற்றுவதாகும். அறுவை சிகிச்சை மூலமாக ஒருவரின் இதயத்துக்கு மிக அருகில் பொருத்தப்படும் இந்த பேஸ்மேக்கர் கருவி, பயனாளியின் இதயத் துடிப்பைக் கண்காணித்துக்கொண்டே இருக்கும். ஒருவேளை இதயத்துடிப்பு திடீரென அதிகரித்தாலோ அல்லது திடீரெனக் குறைந்தாலோ, மெல்லிய மின் அதிர்வலைகளை உடலுக்குள் செலுத்தி அதைச் சீராக்குகிறது. இதயம் பலவீனமானவர்கள் மற்றும் ஏதேனும் இதைய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர்கள் பரிசோதனையின் பேரில் பேஸ்மேக்கர் பொருத்த அறிவுறுத்துவார்கள். இதன் மூலம் இதய சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்நாளை நீட்டிக்கச்செய்ய முடியும். உயிரையும் கூடக் காப்பாற்ற முடியும்!
1960 ல் வில்சன் கிரேட்பாட்ச் இந்த பேஸ்மேக்கர் கருவியைக் கண்டறிந்தார். அன்று முதல் இன்று வரை பலரின் உயிரைக் காப்பாற்றியிருக்கிறது இந்த பேஸ்மேக்கர் கருவி. அமெரிக்காவில் மட்டும் 1993 லிருந்து 2009 வரையான கால கட்டத்தில் முப்பது லட்சம் நோயாளிகள் பேஸ்மேக்கர் பொருத்தியிருப்பதாகத் தெரிகிறது. இப்போது இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கலாம். இந்தியாவிலும் பரவலாக பேஸ்மேக்கர் உபயோகப் படுத்தப்படுகிறது. பலரின் உயிரைக் காப்பாற்றுகிறது.
உலகின் பல மூலைகளிலும் உள்ள நூற்றுக்கணக்கான நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றிய பேஸ்மேக்கரை உருவாக்கிய வில்சன், இறுதியில் செப்டெம்பர் 27, 2011 ஆம் ஆண்டு மறைந்தார். அறிவியலாளர் மறையலாம், ஆனால் அவரின் கண்டுபிடிப்பு மறைவதில்லை. மாறாக மெருகேற்றப்படுகிறது. வில்சன் கண்டுபிடித்த பேஸ்மேக்கர் கருவியில் இருக்கும் குறைபாடு, ஒவ்வொரு 5 அல்லது 10 வருடம் கழித்தும் அந்த பேஸ்மேக்கர் கருவியின் பேட்டரியை மாற்ற வேண்டும். இதனால் ஒவ்வொரு 5 அல்லது 10 வருடம் கழித்தும் பாதிக்கப்பட்டவர்கள் அறுவை சிகிச்சை செய்ய நேரிடும். இதனால் ரத்த இழப்பு, நோய்த் தோற்று, மயக்கம் போன்ற பல உடல் உபாதைகளுக்கு பாதிக்கப்பட்டவர் ஆளாக நேரிடும்.
இந்தக் குறைபாட்டைக் களைவதற்காக சீனாவைச் சேர்ந்த அறிவியல் அறிஞர் Hao Zhang, உடலுக்குள் பொருத்தப்படும் பேஸ்மேக்கர் கருவி தன்னைத் தானே சார்ஜ் ஏற்றிக் விதமாக வடிவமைத்து இருக்கிறார்கள். இதற்கு அறிவியலாளர்கள் நாடிய தொழில்நுட்பம் Piezoelectric முறை. ஒவ்வொரு இதயத் துடிப்பின் போதும் உண்டாகும் அதிர்வுகளை ஒரு மெல்லிய பிளாஸ்டிக் தகட்டில் வாங்கி, அதன் மூலம் உருவாகும் அழுத்தத்தைக் கொண்டு பேஸ்மேக்கர் சார்ஜ் ஏறும் அளவுக்கு மட்டும் உண்டான மின்சாரத்தை Piezoelectric முறை மூலம் உருவாக்கி உள்ளார்கள். இதன் மூலம் ஒவ்வொரு 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை பேஸ்மேக்கரை மாற்றவேண்டிய அவசியம் இருக்காது. மற்றும் இதன் மூலம் பெரும் பொருட்செலவும், பல உடல் உபாதைகளும் தவிர்க்கப்படும் என்பது உறுதி. அறிவியல் துணைகொண்டு ஆகச் சிறந்த காரியங்கள் சாதிக்க முடியும் என்பதற்கு இது ஒரு உதாரணம்!
- செல்லா

No comments:
Post a Comment