Wednesday, February 20, 2019

தன்னைத் தானே சார்ஜ் ஏற்றும் பேஸ்மேக்கர்!

ஒரு கருவியால் உங்களின் இதயத் துடிப்பை சீராக்க முடியும், ஏன் உங்கள் உயிரையே காப்பாற்ற முடியும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? நம்மால் நம்ப முடிகிறதோ இல்லையோ, 1960 களின் தொடக்கத்தில் வாழ்ந்த மக்களால் நிச்சயமாக நம்பியிருக்க முடியாது. இதயம் பலவீனமானால் எப்போது வேண்டுமானாலும் உயிர் போய்விடலாம் என்ற பயத்தில் இருந்த அந்தக் கால மக்களுக்கு, உண்மையாகவே ஒரு கருவி தங்களை வாழ வைக்கக்கூடும் என்று அறிந்த போது, அவர்களால் நிச்சயமாக நம்பியிருக்க முடியாது. ஆனால் ஒரு மனிதனின் அசாத்திய முயற்சியால் அது சாத்தியமானது. அவர் பெயர் வில்சன் கிரேட்பாட்ச் (Wilson Greatbatch)! இன்றும் பலரின் உயிரைக் காப்பாற்றக் கூடிய பேஸ்மேக்கர் என்ற கருவியைக் கண்டுபிடித்தவர் அவர் தான். ஒரு தனி மனிதனின் முயற்சி எவ்வளவு பெரிய நல்ல மாற்றத்தை இந்தச் சமூகத்தில் விளைவிக்கக்கூடும் என்பதற்கு அவர் ஒரு உதாரணம். இத்தனைக்கும் வில்சன் கண்டுபிடித்த அந்தக் கருவி உள்ளங்கையில் அடங்கக் கூடிய ஒன்று என்பது தான் ஒரு ஆச்சரியமான செய்தி!



இயல்பில், ஒரு பொறியியலாளரான வில்சன் கிரேட்பாட்ச், பொருள்களைக் கையாள்வதில் மிக ஆர்வம் உள்ளவராக விளங்கினார். ஒரு கால கட்டத்தில் அவரின் அந்த ஆர்வமே, அவர் பேஸ்மேக்கர் கண்டுபிடிக்கக் காரணமாக இருந்தது. 

ஒரு உள்ளங்கை அளவிற்கே இருக்கும் பேஸ்மேக்கர் கருவியின் பயன்பாடு இதயத்துடிப்பு சீராக உள்ளாதவர்களைக் காப்பாற்றுவதாகும். அறுவை சிகிச்சை மூலமாக ஒருவரின் இதயத்துக்கு மிக அருகில் பொருத்தப்படும் இந்த பேஸ்மேக்கர் கருவி, பயனாளியின் இதயத் துடிப்பைக் கண்காணித்துக்கொண்டே இருக்கும். ஒருவேளை இதயத்துடிப்பு திடீரென அதிகரித்தாலோ அல்லது திடீரெனக் குறைந்தாலோ, மெல்லிய மின் அதிர்வலைகளை உடலுக்குள் செலுத்தி அதைச் சீராக்குகிறது. இதயம் பலவீனமானவர்கள் மற்றும் ஏதேனும் இதைய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர்கள் பரிசோதனையின் பேரில் பேஸ்மேக்கர் பொருத்த அறிவுறுத்துவார்கள். இதன் மூலம் இதய சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்நாளை நீட்டிக்கச்செய்ய முடியும். உயிரையும் கூடக் காப்பாற்ற முடியும்!


1960 ல் வில்சன் கிரேட்பாட்ச் இந்த பேஸ்மேக்கர் கருவியைக் கண்டறிந்தார். அன்று முதல் இன்று வரை பலரின் உயிரைக் காப்பாற்றியிருக்கிறது இந்த பேஸ்மேக்கர் கருவி. அமெரிக்காவில் மட்டும் 1993 லிருந்து 2009 வரையான கால கட்டத்தில் முப்பது லட்சம் நோயாளிகள் பேஸ்மேக்கர் பொருத்தியிருப்பதாகத் தெரிகிறது. இப்போது இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கலாம். இந்தியாவிலும் பரவலாக பேஸ்மேக்கர் உபயோகப் படுத்தப்படுகிறது. பலரின் உயிரைக் காப்பாற்றுகிறது.

உலகின் பல மூலைகளிலும் உள்ள நூற்றுக்கணக்கான நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றிய பேஸ்மேக்கரை உருவாக்கிய வில்சன், இறுதியில் செப்டெம்பர் 27, 2011 ஆம் ஆண்டு மறைந்தார். அறிவியலாளர் மறையலாம், ஆனால் அவரின் கண்டுபிடிப்பு மறைவதில்லை. மாறாக மெருகேற்றப்படுகிறது. வில்சன் கண்டுபிடித்த பேஸ்மேக்கர் கருவியில் இருக்கும் குறைபாடு, ஒவ்வொரு 5 அல்லது 10 வருடம் கழித்தும் அந்த பேஸ்மேக்கர் கருவியின் பேட்டரியை மாற்ற வேண்டும். இதனால் ஒவ்வொரு 5 அல்லது 10 வருடம் கழித்தும் பாதிக்கப்பட்டவர்கள் அறுவை சிகிச்சை செய்ய நேரிடும். இதனால் ரத்த இழப்பு, நோய்த் தோற்று, மயக்கம் போன்ற பல உடல் உபாதைகளுக்கு பாதிக்கப்பட்டவர் ஆளாக நேரிடும். 

இந்தக் குறைபாட்டைக் களைவதற்காக சீனாவைச் சேர்ந்த அறிவியல் அறிஞர் Hao Zhang, உடலுக்குள் பொருத்தப்படும் பேஸ்மேக்கர் கருவி தன்னைத் தானே சார்ஜ் ஏற்றிக் விதமாக வடிவமைத்து இருக்கிறார்கள். இதற்கு அறிவியலாளர்கள் நாடிய தொழில்நுட்பம் Piezoelectric முறை. ஒவ்வொரு இதயத் துடிப்பின் போதும் உண்டாகும் அதிர்வுகளை ஒரு மெல்லிய பிளாஸ்டிக் தகட்டில் வாங்கி, அதன் மூலம் உருவாகும் அழுத்தத்தைக் கொண்டு பேஸ்மேக்கர் சார்ஜ் ஏறும் அளவுக்கு மட்டும் உண்டான மின்சாரத்தை Piezoelectric முறை மூலம் உருவாக்கி உள்ளார்கள். இதன் மூலம் ஒவ்வொரு 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை பேஸ்மேக்கரை மாற்றவேண்டிய அவசியம் இருக்காது. மற்றும் இதன் மூலம் பெரும் பொருட்செலவும், பல உடல் உபாதைகளும் தவிர்க்கப்படும் என்பது உறுதி. அறிவியல் துணைகொண்டு ஆகச் சிறந்த காரியங்கள் சாதிக்க முடியும் என்பதற்கு இது ஒரு உதாரணம்!

- செல்லா

Wednesday, February 13, 2019

நோயைக் கண்டறியும் கணினி ப்ரோகிராம்!

ஒரு கணினி அல்லது ஒரு ரோபோ நமக்கு வந்திருக்கும் நோய் என்னவென்று கண்டறிந்து சொல்லக்கூடும் என்று சொன்னால், உங்களுக்கு எப்படி இருக்கும்? ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம். இது சாத்தியம் தான்.


"என்னப்பா இது? வழக்கமா டாக்டர் ஸ்டெதஸ்கோப் வச்சு பார்ப்பாரு, கண்ணு, காது, மூக்குல லாம் டார்ச் அடிச்சு ஏதும் இருக்கான்னு செக் பண்ணுவாரு, என்ன சாப்டீங்க, எங்கெல்லாம் போனீங்க அப்டின்னு கேள்விலாம் கேப்பாரு. சில சமயம் எக்ஸ்ரே ஸ்கேன் எல்லாம் எடுத்து தான் என்ன எதுன்னே சொல்லுவாரு. இவ்வளவு வேலையையும் ஒரு மெஷின் கிட்ட குடுக்க போறீங்களா? டாக்டர் போடுற ஊசியை பார்த்து பயந்தே குழந்தைங்கல்லாம் ஆஸ்பத்திரிக்கு வரமாட்டேன்னு ஆடம் பிடிக்கும்ங்க. இதுல மெஷின்லாம் வந்து ஊசி போட்டா என்ன ஆகும்?" என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது. ஆனால் நாம் பயம் கொள்ளத்தேவையில்லை. மருத்துவத்துறையில் உண்மையில் ஒரு கணினி அல்லது ரோபோ மனிதர்களுக்கு வரும் நோயைக் கண்டுபிடிக்க முயன்றாலும், அதை மேற்பார்வை பார்ப்பது மனிதர்களாகத்தான் இருக்கும். சரி இப்போது ஒரு கணினி அல்லது ரோபோ எப்படி நோயைக் கண்டுபிடிக்க முடியும் என்று பார்க்கலாம்.

நாம் வழக்கமாக ஊரில் இருக்கும் ஒரு சாதாரணமான மருத்துவரிடம் தான் போய் பரிசோதனை செய்துகொள்வோம். தேவைப்பட்டால் அல்லது நோயின் தீவிரத்தைப் பொறுத்து பெரிய மருத்துவமனைகளை நாடுவோம். மருத்துவர் உடலைப் பரிசோதித்தபின் மருந்துச் சீட்டு எழுதித் தருவார். நாமும் மருந்துச்சீட்டை வைத்து மருந்துகளை வாங்கி உபயோகிக்க ஆரம்பிப்போம். சில நாட்களில் அந்த மருந்துச்சீட்டை தூக்கி எறிந்துவிடலாம் அல்லது மருந்துச்சீட்டு தானாகவே கிழிந்து, அழிந்து போகலாம். மருத்துவரோ அல்லது நாமோ, பாதிக்கப்பட்டவரின் உயரம், எடை, வயது போன்ற தகவல்களையோ, அல்லது பாதிக்கப்பட்ட நோய், அதற்கான மருந்து, மருந்தின் அளவு, எந்தெந்த வேளைகளுக்கு எந்தெந்த மருந்து உண்ணவேண்டும் போன்ற தகவல்களைச் சேகரித்துப் பாதுகாப்பாக வைப்பதில்லை. அதிகபட்சம் நாம் சேமித்து வைத்திருப்பது அதிக செலவில் எடுக்கப்பட்ட ஸ்கேன், எக்ஸ்ரே அல்லது பாதுகாத்து வைத்திருவேண்டும் என்று டாக்டரோ நண்பர்களோ சொல்லும் மருத்துவக் குறிப்புகள் மட்டுமே. "அது சரி. இதையெல்லாம் பத்திரமா சேர்த்து வச்சு நாம என்னப்பா பண்ணப்போறோம்?" என்று கேட்கலாம். ஆனால் இதைப்போன்ற தகவல்களைத் தரவுகளாகப் (Data) பயன்படுத்தும்போது அதன் மூலம் சில நல்ல பயன்களைப் பெறமுடியும் என இன்றைய விஞ்ஞானம் நமக்குக் காட்டிக்கொண்டிருக்கிறது.


அமெரிக்கா, லண்டன், கனடா போன்ற வளர்ந்த நாடுகளில் ஒவ்வொரு மருத்துவமனைகளிலும் மேற்கூறிய தகவல்களை ஒவ்வொரு நோயாளியிடமிருந்தும் பெற்று, அதைச் சேகரித்து வைத்துக்கொள்கிறார்கள். உதாரணமாக, ஒரு நாளைக்கு ஒரு மருத்துவமனைக்கு 100  நோயாளிகள் வருகிறார்கள் என்று வைத்துக்கொள்ளலாம். அப்படியென்றால் ஒரு மாத காலத்தில் மொத்தம் மூவாயிரம் பேர் அந்த மருத்துவமனைக்கு வந்து சென்றிருக்கக்கூடும். இதைப்போல் அந்த நகரில் உள்ள மொத்த மருத்துவமனைகளும் சேகரிக்க ஆரம்பித்தால் ஒரே மாதத்தில் பல்லாயிரம் நோயாளிகளின் தகவல்களை எளிதில் சேகரிக்கலாம். ஆனால், இப்படி சேகரிப்பதால் என்ன பயன் என்று தோன்றுகிறதா? ஆனால் பயன் இருக்கிறது.

உதாரணமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் நாம் நோயாளிகளின் தகவல்களை சேகரிப்பதாக வைத்துக்கொள்ளலாம். இந்த நோயாளிகளின் தகவல்களை வைத்துக்கொண்டு தமிழ்நாடு முழுவதும் பரவலாக எந்த மாதிரியான நோய்கள் வருகின்றன? எந்த மாதங்களில் அவை அதிகமாகப் பரவுகின்றன? யார் முதலில் அந்த நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள் (வயதானவர்கள், குழந்தைகள், பெண்கள் இது போல்)? ஏதாவது ஒரு மாவட்டத்தில் அல்லது ஊரில் பரிந்துரைக்கப்படும் மருந்துகள் நல்ல பலனைத் தருகின்றனவா? அடுத்த வருடம் இந்த நோய் பரவும் போது நல்ல பலனைத் தரும் மருந்துகளை அரசே அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பரிந்துரைக்கலாமா? அடுத்த வருடம் இந்த நோய் வரமால் இருக்க ஏதேனும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க முடியுமா என்பது போன்ற பல வித கோணங்களில் ஆய்வு மேற்கொள்ளலாம். இதைப்போல், எந்த நோய்கள் எந்த மாதிரியான நிலப் பரப்புகளில் அதிகம் பரவுகின்றன, அதற்கான சுற்றுச்சூழல் காரணிகள் என்ன என்பது போன்ற கோணங்களிலும் ஆய்வுகள் மேற்கொண்டு நம்மைக் காத்துக்கொள்ளலாம். மேலும் பல நல்ல வழிகளும் இந்தத் தகவல்களை உபயோகப்படுத்தலாம். ஆனால் ஒரு நாட்டில் இருக்கும் ஆயிரக்கணக்கான மருத்துவமனைகளில் அனுதினமும் வந்துபோகும் கோடான கோடி நோயாளிகளின் தகவல்களை எப்படி சேகரித்து எப்படி அலசி ஆராய்வது? மனிதர்களால்  முடிகின்ற காரியமா இது என்று மலைப்பாகக் கூட இருக்கலாம். ஆனால் தகவல் தொழில்நுட்பத்தால் இது சாத்தியம். கணினியை வைத்து இந்த அசாத்திய செயலை எப்படி செய்ய முடிகிறது என்று பார்ப்போம் வாருங்கள்.



கணினித் துறையில் இருப்பவர்கள் மத்தியில் பரவலாக பிரபலமாக இருக்கும் ஒரு பெயர் பிக் டேட்டா (Big Data). நான் மேலே கூறியது போல், அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் மக்களின் நோயைப் பற்றிய சேகரித்து வைக்கப்பட்ட தகவல்களை, இந்த பிக் டேட்டா தொழில்நுட்பம் கொண்டு ஆய்வு செய்கிறார்கள். பிக் டேட்டா தொழில் நுட்பம் கொண்டு ஒரு நொடியில் நூற்றுக்கணக்கான தகவல்களை ஆய்வு செய்ய, சரி பார்க்க முடியும். இத்தகைய தொழில்நுட்பம் கொண்டு தான் நிதமும் பல லட்சக்கணக்கான தகவல்களை ஆய்வு செய்கிறார்கள். உதாரணத்திற்கு, ஒரு ஊரில் கிடைக்கும் மொத்த பயனாளர்களின் தகவல்களை இந்த பிக் டேட்டா தொழில்நுட்பம் கொண்டு ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே ஆய்ந்து நமக்கு வேண்டிய தகவல்களைக் கண்டறிய முடியும்! இந்தப் பதிவை எழுதும் இன்றைய நாளில், சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு பத்துலட்சம் தரவுகளை (Data) பிக் டேட்டா தொழில்நுட்பத்தால் ஆராய முடியும் என்றால் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்! பிக் டேட்டா போல இன்னும் சில தொழில்நுட்பங்களும் புழக்கத்தில் உள்ளன!



ஒவ்வொரு செயலையும் மெருகேற்ற மெருகேற்ற அதன் மதிப்பு கூடிவிடுகிறது. அதைப்போலத்தான் இந்த பிக் டேட்டா போன்ற தொழில்நுட்பங்களை அடுத்த கட்டத்திற்கு இப்போது அறிவியலாளர்கள் எடுத்துச் செல்கிறார்கள். செயற்கை நுண்ணறிவு எனப்படும் Artificial Intelligence மூலமாக மனிதர்களைப் போல சிந்திக்கும் திறனை உடைய கணினி புரோகிராம்களை அறிவியல் வல்லுநர்கள் வடிவமைத்து வருகின்றனர். இதன் மூலம், உலகில் சேகரிக்கப்படும் அளவில்லாத தகவல்களை ஆராய்ந்து, அந்த ஆய்வின் முடிவின் பேரில் நோய் இன்னதாக இருக்கக்கூடும் என மருத்துவர்களுக்குப் பரிந்துரைக்கும்படி இந்தக் கணினி புரோகிராம்களை உருவாக்கியுள்ளனர். இதற்கு வெற்றியும் கிடைத்துள்ளது. இந்த Artificial Intelligence புரோகிராம்கள் தற்போது சிறுவயதில் ஏற்படும் நோய்களை, மருத்துவர்கள் கண்டறியும் அளவு துல்லியத்தோடு கண்டுபிடிக்கத் துவங்கியிருக்கின்றன. இவை இன்னும் மெருகேற்றப்படும்போது கேன்சர் போன்ற ஆபத்தான நோய்களை நோயின் துவக்கத்திலேயே கண்டறியும் சத்தியம் ஏற்படலாம்! இதன் மூலம் மனித குலத்திற்குப் பல நன்மைகள் விழையக் கூடும். ஒரு வேளை, இந்தச் சாதனையை நிகழ்த்தப் போகிறவர்கள் இன்று கணினி பயிலும், கணினித் துறையில் வேலை புரியும் நம் சகோதர சகோதரிகளாகவோ, பிள்ளைகளாகவோ கூட இருக்கலாம். முயன்றால் எதுவும் சாத்தியம் தானே :)

குறிப்பு: Artificial Intelligence ஒரு வளர்ந்து வரும் துறை. இதன் மூலம் நன்மை மட்டுமே விளையும் என்று இப்போதே உறுதி கூற முடியாது. எல்லா தொழில்நுட்பங்கள் போலவும், Artificial Intelligence தொழில்நுட்பத்திலும் நன்மை தீமை கலந்தே இருக்கும். அன்னம் பாலை நீரிலிருந்து பிரிப்பது போல், நன்மையைத் தனியே பிரித்தெடுத்து மற்றவர்களுக் தருவதில் மனித சமூகத்தின் வெற்றி இருக்கிறது.

-செல்லா

Monday, February 11, 2019

ஆறாம் பேரழிவு!

இதுவரை உலகம் ஐந்து பேரழிவுகளைக் கடந்து வந்துள்ளது. ஆங்கிலத்தில் இதை மாஸ் எஸ்ட்டிங்க்ஷன் (Mass Extinction) என அழைக்கிறார்கள்.


(இந்த ஐந்து பேரழிவுகளைப் பற்றியும் இன்னொரு பதிவில் விரிவாகப் பார்க்கலாம்)

இவற்றை மாஸ் எஸ்ட்டிங்க்ஷன் என்று கூறக் காரணம், மேலே குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு பேரழிவும் உலகில் உள்ள பெரும்பாலான உயிரினங்களை அழித்திருக்கிறது. கிட்டத்தட்ட 70 சதவீத உயிரினங்களுக்கு மேல்! உலகில் பலருக்குப் பிடித்த அழிந்த உயிரினமான டைனோசரும் ஒரு பேரழிவில் (ட்ரையாசிக்-ஜுராசிக் பேரழிவு) காணாமல் போனவைதான். ஆனால் இவையெல்லாம் ஒவ்வொரு காலகட்டங்களில் ஒவ்வொரு இயற்கைக் சூழ்நிலைகளில் ஏற்கனவே நிகழ்ந்து முடிந்த பேரழிவுகள். இப்போது, இந்த ஐந்து பேரழிவுகளைத் தவிர ஆறாவது பேரழிவு ஒன்றும் இருக்கிறது. அது ஹோலேசேன் பேரழிவு. இதில் வருந்தத்தக்க செய்தி என்னவென்றால், இந்த ஆறாம் பேரழிவு இப்போது நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அதுவும் நம் கண்முன்னே!



"என்னப்பா விளையாடுற? பேரழிவாவது ஒண்ணாவது, எல்லாரும் நல்லாத்தானே இருக்கோம்? அப்படி என்ன விண்கல்லா விழுந்துருச்சு? ஏன் பேரழிவு அது இதுன்னு சொல்ற?" என நீங்கள் கேட்பது புரிகிறது. நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும், உண்மையிலேயே ஹோலேசேன் பேரழிவு தற்போது நம் கண்முன்னே நிகழ்ந்துகொண்டிருக்கிறது. நீங்கள் இந்தப் பதிவை வாசித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் கூட, பல நூறு உயிரினங்கள், ஏன் பல ஆயிரம் உயிரினங்கள், இறந்துகொண்டுதான் இருக்கிறன்றன. அதுவும் தினம் தினம்!

"என்ன? ஆயிரமாயிரம் உயிரினம் இருக்குதா? அப்போ ஏன் எங்களுக்கு எதுவுமே தெரியல? ஏன் ஒரு நியூஸ் சேனல் கூட இத பத்தி பேசல? ஒரு பேஸ்புக் பதிவு கூட பாக்கலையே?" என்று நீங்கள் சிந்திப்பது புரிகிறது. எதிர்பாராதவிதமாக, இறந்துகொண்டிருப்பது மனிதர்கள் அல்ல. மாறாக பூச்சிகள். ஒரு பூச்சிக்கா இவ்வளவு பெரிய பேச்சு என்று தோன்றினால், நினைவிருக்கட்டும், அறிவியல் அறிஞர்கள் இதை மாஸ் எஸ்ட்டிங்க்ஷன் என்று அழைப்பது ஒரு பேரழிவுக்கான அறிகுறியாக பூச்சிகளின் அழிவு இருப்பதால் தான்.



உலகில் உள்ள மொத்த பூச்சியினங்களில் 50% க்கும் மேற்பட்ட இனங்கள் அழிந்து வருகின்றன. அதிலும் மூன்றில் ஒரு பங்கு பூச்சியினங்கள் அழிவின் விளிம்பில் இருக்கின்றன. மேலும் ஒவ்வொரு வருடமும் 2.5% பூச்சிகளின் மொத்த எண்ணிக்கை அழிந்து வருகிறது. இதே நிலை தொடர்ந்தால் இன்னும் நூறு ஆண்டுகளுக்குள்ளாகவே இந்த உலகில் உள்ள மொத்த பூச்சியினங்களும் அழிவைச் சந்திக்க நேரிடும். இது சுற்றுச்சூழலுக்கும், மனித இனத்தின் வாழ்வுக்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்!

ஆஸ்திரேலியாவின் யூனிவர்சிட்டி ஆஃப் சிட்னி பல்கழகத்தைச் சேர்ந்த சான்செக் - பேயோ மற்றும், பெய்ஜிங்கின் சீனா அகாடெமி ஆஃப் அக்ரிகல்ச்சர் பல்கழகத்தைச் சேர்ந்த க்றிஸ் ஆகியோர் இணைந்து அளித்த இந்த சமீபத்திய ஆய்வறிக்கை இந்த அபாயகர அறிக்கையை உலகத்துக்கு அளித்துள்ளது. அதில் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்.



"உலகில் நாம் நினைப்பதை விட பூச்சிகளுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. உணவாகவும், பூக்களில் மகரந்தச் சேர்க்கை நடக்கவும், இறந்த பழங்கள், உயிரினங்களை முழுவதுமாக அழிப்பதிலும், பூச்சிகளின் பங்கு முக்கியமானது. உலகில் உள்ள மொத்த மனிதர்கள் மற்றும் பிற விலங்குகளின் எடையை விட 17 மடங்கு அதிகம் இருப்பவை பூச்சியினங்கள். அவ்வளவு எண்ணிக்கையில் உள்ள பூச்சியினங்கள் இன்னும் 100 வருட காலங்களில் அழிந்துவிடும் என்பது மிக அபாயகரமான ஒன்று!"

உலக அளவில் பூச்சியினங்கள் எவ்வளவு தூரம் அழிந்து வருகின்றன என்று துல்லியமாகக் கண்டறிய, இந்தக் குழு அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியாவில் இருந்து சீனா வரையுள்ள சில பகுதிகள், பிரேசிலில் இருந்து ஆப்பிரிக்க வரை உள்ள சில பகுதிகள் மற்றும் இன்னும் சில இடங்களில் ஆய்வு மேற்கொண்டது. இக்குழுவின் ஆய்வு முடிவுகள் அவர்கள் எண்ணியபடி மகிழ்ச்சிகரமான ஒன்றாக இல்லை.

லெபிடோபெட்ரா (வண்ணத்துப்பூச்சி), ஹைமெனோப்டெரா (ஈ),  கோலியோப்டெரா (பீட்டில் எனப்படும் வண்டுகள்) ஆகிய குடும்பத்தைச் சேர்ந்த பூச்சியினங்கள் தான் அதிகமாக அழிந்துவரும் பூச்சியினங்கள். குறிப்பாக 2000 லிருந்து 2008 வரை இங்கிலாந்தில் உள்ள வண்ணத்துப்பூச்சியினங்களில் 58% வரை அழிந்து போயிருக்கின்றன. தேனீக்களும் அழிவில் இருக்கின்றன. 1947 ல் அமெரிக்காவில் 60 லட்சம் வரை இருந்த தேனீக்கள், தற்போது 35 லட்சமாகக் குறைந்துள்ளன. வண்டுகளும் அழித்துக்கொண்டு வருகின்றன. (இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் இதை விட மோசமாக இருக்கக்கூடும்).

பெரும்பாலான பூச்சியினங்கள் அழித்துக்கொண்டு வந்தாலும், தகவல்கள் சேகரிப்பில் உள்ள கடினம் காரணமாக எல்லா பூச்சியினங்களும் அழிந்துகொண்டுதான் வருகின்றன என்று கூற இயலவில்லை. சில பூச்சியினங்கள், குறிப்பாக பம்பிள் பீ (Bumble Bee) எனப்படும் தேனீக்கள் பூச்சிமருந்துகளைத் தாங்கியும், பிற போட்டி தேனீக்கள் இல்லாததாலும் எண்ணிக்கையில் அதிகரித்துள்ளதாக நம்பப்படுகிறது. இருப்பினும் இது கண்டிப்பாக அதிகரிக்கிறது என்று அறுதியிட்டுக்கூற போதிய தகவல்கள் இல்லை. மேலும், சில பூச்சியினங்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பதால், மற்ற பூச்சியினங்கள் அழிவுகள் ஈடுகட்டப்படும் என்றில்லை.

இங்கிலாந்து இந்த பூச்சியினங்கள் அழிவை பெரிய அளவில் சந்தித்தாக நம்பப்படுகிறது. அதே போல் பியூடோரிகோவில் கடந்த 30 ஆண்டுகளில் மட்டும் 98% பூச்சியினங்கள் அழிந்துள்ளன. இவை நாம் எளிதில் கடந்து போய்விடக்கூடிய அளவுக்கு சாதாரணமான அழிவுகள் அல்ல.

அதிகப்படியான பூச்சிமருந்து உபயோகங்களும், அதிக அளவிலான நகரமயமாக்கலும், புவித்தட்பவெப்பநிலை மாறுபாடும் பூச்சிகளின் அழிவில் பெரும்பங்கு வகிக்கின்றன. இவை பூச்சிகளின் வாழ்வாதாரத்தை அழிப்பதோடு உறைவிடத்தையும் அழிக்கின்றன என்று சான்செக் - பேயோவின் ஆய்வறிக்கை கூறுகிறது. "அதிக பூச்சிமருந்து உபயோகம் இல்லாத, இயற்கைவழி விவசாய முறைகளையும், நகரமயமாதலைக் கட்டுப்படுத்துவதையும், புவி வெப்பமயமாவதைக் குறைப்பதையும் தான் பூச்சிகளின் அழிவைக் கட்டுப்படுத்த இருக்கும் வழிமுறைகள். பூச்சிகள் இயற்கையில் முக்கியப்பங்கு வகிக்கின்றன. பூக்கள் கனியாவதிலும், இறந்த உயிரினங்களை மக்கச் செய்வதிலும், தேன் போன்ற பொருட்களின் உருவாக்கத்திற்கும் பூச்சிகள் காரணமாக இருக்கின்றன. மேலும், பறவைகள், ஊர்வன, நீர்வாழ்வன, மற்றும் தவளையினங்கள் போன்ற உயிரினங்கள் பூச்சிகளைத் தான் உணவாய் உண்டு வாழ்கின்றன. பூச்சிகளின் அழிவு, அவற்றைச் சார்ந்திருக்கும் தாவர, விலங்கினங்களின் அழிவுக்கும் வித்திடும்" என்கின்றனர் சான்செக் - பேயோ. 

மக்களுக்கு இந்த அழிவைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிக அவசியமாகிறது. கடந்த 25 முதல் 30 ஆண்டுகளில் 80% பூச்சியினங்கள் அழிந்துவிட்டன என்பது மிகப்பெரிய அபாயம். குறிப்பாக, 5 மாஸ் எஸ்ட்டிங்க்ஷன் என்னும் உலகப்பேரழிவுகளைக் கடந்து வந்த பூச்சியினங்கள், சில வருடங்களில், மனிதர்களின் தலையீட்டால் அழிந்து வருவது என்பது நாம் அனைவரும் கவனத்தில் கொள்ளவேண்டிய கருத்து. இந்த அழிவைத் தடுத்து நிறுத்தாவிட்டால், இதன் பாதிப்பு மனிதர்களுக்கும் மற்றும் உலகிற்கும் மிக அதிகம்.

- செல்லா

தன்னைத் தானே சார்ஜ் ஏற்றும் பேஸ்மேக்கர்!

ஒரு கருவியால் உங்களின் இதயத் துடிப்பை சீராக்க முடியும், ஏன் உங்கள் உயிரையே காப்பாற்ற முடியும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? நம்மால் நம்ப...